அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு: காவல் துறைக்கு விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற உத்தரவு
அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கை வேலூரிலிருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதற்கான காரணத்தை விளக்குமாறு, சென்னை உயர்நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
2006–2011 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த துரைமுருகன், வருமானத்தை மீறி ரூ.1.40 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்ததாக 2011-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில், வேலூர் சிறப்பு நீதிமன்றம் 2017 ஜனவரியில் இருவரையும் விடுவித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை மேல்முறையீடு செய்தது. அதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், விடுதலை உத்தரவை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரித்து ஆறு மாதங்களில் முடிக்குமாறு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
பின்னர், வழக்கு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின் அடிப்படையில், வழக்கை மீண்டும் வேலூருக்கு மாற்ற கோரி துரைமுருகன் மற்றும் அவரது மனைவி மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், சிறப்பு நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்தது.
இதனை எதிர்த்து, துரைமுருகன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணை நடைபெற்றது. அப்போது, வழக்கில் உச்ச நீதிமன்றம் சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கிய நீதிபதி, வழக்கை நவம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும், சொத்துக் குவிப்பு வழக்கு வேலூரிலிருந்து சென்னை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதற்கான முழுமையான விளக்கத்தை காவல் துறை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.