சாலை சேதம் காரணமாக மீஞ்சூரில் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பகுதியில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சாலை கடுமையாக சேதமடைந்து, அப்பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
திருவொற்றியூர் சாலையில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய் உடைந்து, அதிலிருந்து வெளியேறிய நீர் சாலையின் பல இடங்களில் தேங்கி நிற்கிறது. இதன் விளைவாக, சாலை முழுவதும் பள்ளங்களும் குழிகளுமாக மாறியுள்ளது.
இந்தச் சாலையில் செல்லும் போது பல வாகனங்கள் சிக்கிக்கொண்டு விபத்துகளுக்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேங்கிய நீரை அகற்றவும், சேதமடைந்த சாலையைச் சீரமைக்கவும் பல நாட்களாகக் கோரிக்கை விடுத்தபோதும், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை எதிர்த்து, டயர் மற்றும் டியூப் பழுது பார்க்கும் கடை உரிமையாளர்கள், பொதுமக்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் பின்னணியில், பள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் மண் நிரப்பி தற்காலிகமாகச் சாலை சீரமைப்பு செய்யப்பட்டது. இருப்பினும், நிரந்தர தீர்வாக புதிய சாலையை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.