கேரளாவில் பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவல்: தமிழக எல்லைகளில் கடும் முன்னெச்சரிக்கை
கேரளா மாநிலத்தில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து தமிழகத்துக்குள் நுழையும் கனரக வாகனங்களுக்கு மாநில எல்லைகளில் கடுமையான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட கேரளாவின் சில மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் பதிவான நிலையில், அந்த நோய் தமிழகத்திற்கு பரவாமல் தடுக்கும் நோக்கில் பொது சுகாதாரத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் அடிப்படையில், தமிழக–கேரள எல்லைப் பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படந்தாலுமூடு மாநில எல்லை சோதனைச் சாவடியில், கேரளாவிலிருந்து வரும் வாகனங்களின் டயர்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே தமிழகத்திற்குள் அனுமதி வழங்கப்படுகிறது.