முடிச்சூர் பிரதான சாலை: பொதுமக்களை வாட்டும் மோசமான நிலை
தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட முடிச்சூர் – தாம்பரம் முக்கிய சாலை, பல இடங்களில் உடைந்தும் பள்ளங்களாகவும் இருப்பதால், விபத்துகள் அடிக்கடி நிகழ்வதுடன், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்த முக்கிய சாலை கடந்த பல மாதங்களாக பழுதடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. குறிப்பாக, இதே சாலையில்தான் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா அவர்களின் இல்லமும் அமைந்துள்ளது.
இவ்வளவு மோசமான சூழல் நிலவினும், சாலையைச் சீரமைக்கும் முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், அந்த சாலையை அவர் தினமும் பயன்படுத்தி சென்றாலும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
சாலை பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதாகவும், கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அன்றாட வாழ்க்கையில் பெரும் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
இதனால், முடிச்சூர் – தாம்பரம் பிரதான சாலையை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.