கோவை முன்னேற்றத்திற்கு மத்திய அரசின் மிகப்பெரிய திட்டம்!
கோவை – நீலாம்பூர் மற்றும் மதுக்கரை இடையே உள்ள பைபாஸ் சாலை, 6 வழிகளாக விரிவுபடுத்த ரூ.1,800 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டம் தயாராகியுள்ளது. இந்த சாலை மேம்பாட்டால் கோவை மாவட்டத்திற்கு கிடைக்கும் பல நன்மைகள் குறித்து கீழே காணலாம்.
தென்னிந்தியாவின் “மான்செஸ்டர்” என அழைக்கப்படும் கோவை நகரம், இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாகும். ஆயிரக்கணக்கான சிறு, நடுத்தர தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் ஐ.டி. நிறுவனங்கள் இங்கு அதிகரித்து வருவதால், போக்குவரத்து நெரிசல் தினந்தோறும் அதிகரிக்கிறது.
26 கிலோமீட்டர் நீளமான நீலாம்பூர்–மதுக்கரை சாலையில், 10 க்கும் மேற்பட்ட சந்திப்பு சாலைகள் இருக்கின்றன. இதனால் போக்குவரத்து பெரும் நெரிசலை சந்திக்கிறது. இதைத் தவிர்க்க, இருவழி சாலை, 6 வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தயாரித்துள்ளது. பொதுமக்கள் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
திட்டத்தின் படி, தற்போதைய 10.5 மீட்டர் அகல சாலை எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு 45 மீட்டர் வரை விரிவாக்கப்படும். சாலை குறுக்கே உள்ள இருகூர் மற்றும் செட்டிபாளையம் ரயில்வே பாலங்களும் அகலப்படுத்தப்படும்.
சிந்தாமணிபுதூர் சந்திப்பு மற்றும் பொள்ளாச்சி சாலை சந்திப்பு போன்ற இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும், 13 இடங்களில் கீழ்மட்ட சுரங்கப் பாதைகளும் உருவாக்கப்படுகின்றன. இதனால் வாகனங்கள் எந்த தடையும் இல்லாமல், வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும்.
இதற்காக 49 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் டெண்டர் அறிவிப்பதற்கான திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்த வரிசையில் விரைவாக வளர்ந்து வரும் கோவை, மத்திய அரசின் இந்த மெகா திட்டத்திற்கு மக்களின் ஆதரவும் பெரிதாக உள்ளது.