அப்பாவி மக்கள்மீது தாக்குதலை முதல்வர் கண்மூடித் தனமாக பார்க்கக் கூடாது – நயினார் நாகேந்திரன்
அப்பாவி பொதுமக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தும் சம்பவங்களை தமிழக முதல்வர் அலட்சியமாக வேடிக்கை பார்க்கக் கூடாது என, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் இரு வாகன உரிமையாளர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறை சமரசம் செய்வதாகக் கூறி வந்த சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திமுக 63வது வட்டச் செயலாளர், பொதுமக்களிடம் நாகரிகமற்ற முறையில் ஆபாசமாகவும் அருவருப்பாகவும் பேசும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களை மரியாதையின்றி வசைபாடுபவர்கள் முதல் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர்கள் வரை, இப்படியானவர்களை திமுக ஆளுங்கட்சி திமிருடன் வளர்த்து விட்டு, மேடைகளில் மட்டும் பகுத்தறிவு மற்றும் சமூக நீதி பற்றிப் பேசுவது தான் திராவிட மாடல் ஆட்சியா என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், பொது மேடைகளிலேயே அமைச்சர் பதவியில் இருந்து கொண்டே பெண்களை இழிவுபடுத்தி பேசும் மூத்த தலைவர்களை கொண்ட கட்சி, வளர்ச்சி அரசியலை எவ்வாறு முன்னெடுக்க முடியும் என்றும் அவர் சாடியுள்ளார்.
ரவுடிசம், வன்முறை போன்றவற்றை ஊக்குவிக்கும் இந்த கருப்பு – சிவப்பு படையைக் கைக்குள் வைத்துக் கொண்டு, “தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன்” என ஆளும் தரப்பு பேசுவது மிகுந்த வெட்கக்கேடானது என்றும் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, தங்கள் பதவியின் பொறுப்புணர்ந்து, அவதூறாகவும் அநாகரிகமாகவும் பேசிய வட்டச் செயலாளர் மீதும், இருசக்கர வாகன உரிமையாளரை தாக்கியதாக கூறப்படும் கார் உரிமையாளர்மீதும் உடனடியாக வழக்குப் பதிவு செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.