மூத்த அரசியல் தலைவரான நல்லகண்ணுவுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி மூத்த தலைவரான நல்லகண்ணுவின் பிறந்த நாளை முன்னிட்டு, குடியரசு துணைத் தலைவர் மற்றும் பாஜக கட்சியின் முக்கிய தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நல்லகண்ணு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற வீரராகவும், தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை காக்கும் போராட்டங்களில் முன்னணியில் நின்றவராகவும் விளங்கியவர் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவருக்கு இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
அதேபோல், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், ஞானம், நேர்மை மற்றும் மனிதநேயப் பண்புகள் ஒருங்கிணைந்த உருவமே நல்லகண்ணு எனப் புகழ்ந்து, அவருக்கு 101வது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நேர்மையான அரசியல் வாழ்க்கையையும் எளிமையான தனிப்பட்ட வாழ்வையும் கடைப்பிடித்து வரும் நல்லகண்ணு ஒரு சமூக சீர்திருத்தவாதி எனக் கூறியதுடன், அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.