தவெகவுக்கு ஆதரவாக வாக்களிக்க பொதுமக்கள் தயாராக உள்ளனர் : செங்கோட்டையன் பேட்டி
மற்ற அரசியல் கட்சிகளைப் போல வீடு வீடாகச் சென்று வாக்குகளை கேட்க வேண்டிய அவசியம் தவெகவுக்கு இல்லை என்றும், அக்கட்சிக்கு வாக்களிக்க மக்கள் மனதளவில் தயாராக உள்ளனர் என்றும் தவெக தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் கரட்டூர் பகுதியில் செயல்பட்டு வரும் கட்சி அலுவலகத்தில், செங்கோட்டையன் தலைமையில் தவெக அமைப்பின் வளர்ச்சி நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் விட்டுப்போன நபர்களின் விவரங்கள் அந்தந்த பகுதி பொறுப்பாளர்களிடம் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு பிறகு, தவெக தலைவர் விஜயுடன் இணைந்து செயல்படும் வாய்ப்பு கிடைத்திருப்பது பெருமைக்குரிய விஷயம் எனக் குறிப்பிட்டார்.
மேலும், வேறு அரசியல் அமைப்பாக இருந்தால் வாக்குகளைத் தேடி அலைய வேண்டிய சூழல் இருக்கும்; ஆனால் தவெகவின் பெயர், தேர்தல் தேதி மற்றும் சின்னம் அறிவிக்கப்பட்டால் போதும், மக்கள் தன்னார்வமாக வாக்களிக்கத் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.