அதிர்ச்சியை ஏற்படுத்தும் எப்ஸ்டீன் ஆவணங்கள் : ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் உண்மையா?
அமெரிக்காவில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள ‘எப்ஸ்டீன் ஆவணங்கள்’ தொடர்பாக, முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது முன்வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், அவை முற்றிலும் தவறான தகவல்கள் என்றும் அமெரிக்க நீதித்துறை தெளிவுபடுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
சிறுமிகளை கடத்தி பாலியல் வணிகத்தில் ஈடுபடுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட அமெரிக்க தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கு ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தன. இதன் விளைவாக, அமெரிக்க நீதித்துறை ‘எப்ஸ்டீன் பைல்ஸ்’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஆவணங்கள் மற்றும் பதிவுகளை அண்மையில் வெளியிட்டு வருகிறது.
இந்த ஆவணங்களில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவை இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட மறுநாளே 16 புகைப்படங்கள் திடீரென அகற்றப்பட்டன. குறிப்பாக, ட்ரம்ப் தொடர்புடையதாக கூறப்பட்ட சர்ச்சைக்குரிய படங்களே நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனால், அந்தப் புகைப்படங்களை மீண்டும் வெளியிட எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொண்டன.
இந்த நடவடிக்கையை உண்மையை மறைக்கும் அரசு முயற்சியாக விமர்சித்த எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தைத் தொடர்ந்து, நீக்கப்பட்ட சில புகைப்படங்கள் மீண்டும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இதற்கிடையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள 11,000-க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட எப்ஸ்டீன் ஆவணங்களில், டொனால்ட் ட்ரம்ப் குறித்து பல குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அந்த ஆவணங்களில் நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், எப்ஸ்டீன் மற்றும் அவரது கூட்டாளியான கிஸ்லைன் மேக்ஸ்வெல்லுடன் ட்ரம்ப் மேற்கொண்டதாகக் கூறப்படும் விமானப் பயணங்களைப் பற்றி பதிவு செய்துள்ளார். 1993 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் குறைந்தது எட்டு முறை ட்ரம்ப் விமானப் பயணங்களில் பங்கேற்றதாகவும், அதில் நான்கு பயணங்களில் கிஸ்லைன் மேக்ஸ்வெல்லும் உடனிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். சில பயணங்களில் ட்ரம்பின் முன்னாள் மனைவி மார்லா மேப்பிள்ஸ், அவரது மகள் டிஃபானி மற்றும் மகன் எரிக் ஆகியோரும் பயணம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ‘ஏ’ என அடையாளம் மறைக்கப்பட்ட ஒருவர், கிஸ்லைன் மேக்ஸ்வெல்லிடம் ‘ஒழுங்கற்ற நண்பர்கள்’ குறித்து கோரியதாகக் கூறப்படும் மின்னஞ்சல்கள் பலவும் இந்த ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. அந்த ‘ஏ’ யார் என்பது உறுதியாக தெரியாத நிலையில், அவர் முன்னாள் பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ அல்லது ட்ரம்பாக இருக்கலாம் என சில தகவல்கள் பரவுகின்றன.
இதற்கிடையில், எப்ஸ்டீனுடன் பல ஆண்டுகளாக நட்பு இருந்ததை ட்ரம்ப் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தாலும், எப்ஸ்டீன் ஒரு “தவறான மனிதர்” என்பதை உணர்ந்த பின்னர் அவருடன் தொடர்பை துண்டித்ததாக அவர் முன்பே விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், புதிய ஆவணங்கள் மீண்டும் விவாதத்தை தூண்டியுள்ளன.
அதே நேரத்தில், இளம் பெண் விளையாட்டு வீராங்கனைகளை பாலியல் சுரண்டலுக்கு உட்படுத்திய வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமெரிக்க ஜிம்னாஸ்டிக்ஸ் மருத்துவர் லாரி நாசருக்கு எப்ஸ்டீன் அனுப்பியதாக கூறப்படும் ஒரு கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அந்தக் கடிதத்தில் உள்ள அஞ்சல் குறியீடு விர்ஜினியாவைச் சேர்ந்ததாகவும், அந்த நேரத்தில் எப்ஸ்டீன் நியூயார்க் சிறையில் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்தக் கடிதத்தில் எப்ஸ்டீனின் கைதி எண் இல்லை என்றும், பதில் முகவரி தவறாக இருப்பதாகவும், எப்ஸ்டீன் மரணமடைந்த மூன்று நாட்களுக்குப் பிறகே அந்தக் கடிதம் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, அதில் உள்ள கையெழுத்து எப்ஸ்டீனின் உண்மையான கையெழுத்துடன் பொருந்தவில்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அந்தக் கடிதம் போலியானது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள எப்ஸ்டீன் பைல்ஸில், எப்ஸ்டீனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் 10 நபர்களின் பெயர்கள் இடம்பெற்ற FBI மின்னஞ்சல்கள் அடங்கியுள்ளன. இதில் ட்ரம்ப் மீது முன்வைக்கப்பட்ட பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளும் குறிப்பிடப்பட்டுள்ளன.
1995 ஆம் ஆண்டு, ட்ரம்ப் ஒரு பெண்ணை பாலியல் வன்முறை செய்வது குறித்து பேசிக்கொண்டிருந்ததை தாம் ஒட்டுக்கேட்டதாகவும், அந்த உரையாடலில் “ஜெஃப்ரி” என்ற பெயர் குறிப்பிடப்பட்டதாகவும் ஒரு ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ட்ரம்ப் மீது முன்வைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லாதவை என்றும், அவை முற்றிலும் பொய்யானவை என்றும் அமெரிக்க நீதித்துறை விளக்கம் அளித்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகளில் சிறிதளவு நம்பகத்தன்மை கூட இருந்திருந்தால், அவை ஏற்கனவே அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருக்கும் என்றும் நீதித்துறை தெரிவித்துள்ளது.