தேர்தல் அறிக்கை குழுவை அமைக்க முதலமைச்சருக்கு வெட்கமில்லையா? – அண்ணாமலை கேள்வி
உரிமைகளை முன்வைத்து போராடும் மக்களை அடக்குவதையே திமுக அரசு தனது பிரதான பணியாக மாற்றியுள்ளது என்று, முன்னாள் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
சென்னையில் இன்று சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் மீது திமுக அரசு பலவந்தமான நடவடிக்கைகள் மேற்கொண்டு கைது செய்திருப்பது மிகக் கடுமையாக கண்டிக்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக, ஐந்து ஆண்டுகள் கடந்தும் தன் எந்த வாக்குறுதியையும் முறையாக நிறைவேற்றவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
குறிப்பாக, திமுக தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி எண் 311-ல் கூறிய சமவேலைக்கு சமஊதியம் வழங்குவோம் என்ற உறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு முறைகளில் கோரிக்கைகளை முன்வைத்து, கவன ஈர்ப்பு போராட்டங்கள் நடத்திய போதும், திமுக அரசு அதை முற்றிலும் புறக்கணித்து அவர்களை ஏமாற்றி வருவதாக அண்ணாமலை தெரிவித்தார்.
தங்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்புபவர்களை கைது செய்து அடக்குவதையே திமுக அரசு நிரந்தர நடவடிக்கையாக மேற்கொண்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஐந்து ஆண்டுகளாக முன்தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய நிலையில், மீண்டும் புதிய தேர்தல் அறிக்கை குழுவை அமைக்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெட்கம் இல்லையா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.