வேலைக்கு ஏற்ற சம்பளம் வழங்க விடியா அரசுக்கு ஏன் தடங்கல்?
வேலைக்கு ஏற்ப ஊதியம் வழங்குவதில் விடியா அரசுக்கு என்ன பிரச்சனை உள்ளது? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ஒவ்வொரு சந்தும் மூலையிலும் சமத்துவம் பேசும் திமுக அரசு, சமவேலைக்கு சமச்சம்பளம் வழங்க வேண்டும் எனக் கோரி போராடிய இடைநிலை ஆசிரியர்கள்மீது அடக்குமுறையை கையாள்ந்து, அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த தேர்தலின்போது, இடைநிலை ஆசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என வாக்குறுதி எண் 311-ல் அறிவித்த திமுக அரசு, அந்த உறுதிமொழியை மறந்து, ஆசிரியர்கள் முதல் செவிலியர்கள் வரை அனைவரையும் சமவேலைக்கு சமச்சம்பளம் கேட்டு போராட வேண்டிய அவல நிலைக்கு தள்ளியுள்ளது. இதுவே நாடு பாராட்டும் நல்லாட்சியா? என அவர் வினவியுள்ளார்.
தேவையற்ற செலவுகளுக்கும், அர்த்தமற்ற விளம்பரங்களுக்கும் பணத்தை தாராளமாக செலவிடும் திமுக அரசுக்கு, அரசு ஊழியர்கள் செய்யும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்குவதில் மட்டும் தயக்கம் ஏன்? என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசுப் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை வாக்குறுதியின்படி நிரப்பாமல், பணியில் உள்ள ஊழியர்களுக்கு முறையான சம்பளத்தை வழங்காமல், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பயன்களையும் வழங்காமல், அரசு நிர்வாக அமைப்பை முழுமையாக செயலிழக்கச் செய்ததே திமுக அரசின் நான்கு ஆண்டு கால சாதனை என்று அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், மக்களின் வரிப்பணத்தையும் அரசு ஊழியர்களின் சம்பளத் தொகையையும் தவறாக பயன்படுத்தி, அரசுக் கஜானாவை வெறுமையாக்கிய திமுக அரசை, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் கண்டிப்பாக நிராகரிப்பார்கள் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.