வேங்கைவயல் சம்பவம் : மூன்றாம் ஆண்டு நினைவு – நீதி இன்னும் எட்டாத நிலை
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் நடைபெற்று இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சமூகத்தினரையே குற்றவாளிகளாக சித்தரிக்கும் போக்கை திமுக அரசு கடைப்பிடித்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த அவமானகரமான நிகழ்வைத் தொடர்ந்து, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர், தமிழக அரசின் உத்தரவின்படி, இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதேவேளையில், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான தனிநபர் விசாரணைக் குழுவும், பட்டியலின ஆணையமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டன.
இந்த விசாரணைகளின் அடிப்படையில், புதுக்கோட்டை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து, புகார் அளித்த தரப்பைச் சேர்ந்த காவலர் முரளிராஜா உட்பட மூன்று பேரே சம்பவத்துக்கு காரணம் எனக் கூறி சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொள்ளக் கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதும், அது தற்போது நீதிமன்ற பரிசீலனையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தின் எதிரொலியாக, கடந்த மக்களவைத் தேர்தலில் ஒரு பிரிவினர் வாக்களிப்பை புறக்கணித்ததால், அந்தப் பகுதியில் குறைந்த அளவிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது.
இத்தகைய சூழலில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வேங்கைவயல் சம்பவம் எந்த அளவுக்கு அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.