இந்தியாவின் முதலாவது AI சூப்பர் பைக் – குஜராத் மாணவர்களின் அசத்தல் சாதனை!
இந்தியாவில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் சூப்பர் பைக்கை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் மாணவர்கள் உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
வேகமாக முன்னேறி வரும் தகவல் தொழில்நுட்பத் துறையில், தற்போது செயற்கை நுண்ணறிவு முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. மனித சிந்தனைக்கு இணையான செயல்பாடுகளை மேற்கொள்ளும் இந்த தொழில்நுட்பம், நாளுக்கு நாள் புதிய பரிணாமங்களை அடைந்து வருகிறது.
AI வளர்ச்சியின் வேகத்தை கருத்தில் கொண்டு, உலகளவில் பல்வேறு நிறுவனங்களும் முதலீட்டாளர்களும் பெருமளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
இந்த நவீன தொழில்நுட்பத்தின் திறனை பயன்படுத்தி, குஜராத் மாநிலம் சூரத் நகரத்தைச் சேர்ந்த மூன்று பொறியியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து ‘கருடா’ என்ற பெயரில் இந்தியாவின் முதல் AI சூப்பர் பைக்கை வடிவமைத்துள்ளனர்.
இந்த பைக் சுமார் 50 சதவீதம் பழைய இயந்திர உதிரிப்பாகங்களை மீண்டும் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த முயற்சியாகவும் பாராட்டப்படுகிறது.
மேலும், இதில் ஜிபிஎஸ் வழிநடத்தல் வசதி, பல்வேறு சென்சார் அமைப்புகள், குரல் கட்டளைகள் மூலம் இயக்கும் வசதி உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.