உலக அளவில் 3-வது வலிமையான ராணுவ சக்தியாக உயர்ந்த இந்தியா!
ஆண்டுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா, தற்போது உலகின் மூன்றாவது மிகப் பெரிய ராணுவ வல்லரசாக வளர்ந்து வருகிறது. பாதுகாப்பு துறையில் தனது ஏற்றுமதியை மேலும் விரிவுபடுத்த இந்தியா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் பின்னணியை விரிவாக பார்ப்போம்.
பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்ட தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளும், சீனா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் தயாரித்த ஆயுதங்களை முறியடித்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையும், உலக அரங்கில் இந்தியாவின் ராணுவ திறனை உயர்த்திக் காட்டியது.
இந்த நடவடிக்கையின் போது இந்தியா, முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆயுத அமைப்புகளை பயன்படுத்தியதுடன், ட்ரோன் தாக்குதல்களை முறியடிக்கும் தொழில்நுட்பத்திலும் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியது.
இதன் விளைவாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ உபகரணங்கள் சர்வதேச சந்தையில் அதிக வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளன. இந்திய தயாரிப்பு வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்திய அரசின் தெளிவான கொள்கைகள் மற்றும் மேக் இன் இந்தியா திட்டம், உலகளாவிய பாதுகாப்பு சந்தையில் இந்தியாவை வளர்ந்து வரும் முக்கிய சக்தியாக மாற்றியுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி மதிப்பு 1.54 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. அதே நேரத்தில், ஆயுத ஏற்றுமதி சுமார் 12 சதவீதம் உயர்ந்து 24 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது.
இப்போது இந்திய ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களில் 65 சதவீதத்திற்கும் அதிகமானவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதனால் வெளிநாட்டு இறக்குமதி சார்புநிலை குறைந்து, உள்நாட்டு தொழில்துறை வலுப்பெற்றுள்ளது. 2013-14 ஆம் ஆண்டில் 686 கோடியாக இருந்த பாதுகாப்பு ஏற்றுமதி, தற்போது 35 மடங்கு உயர்ந்து 30 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.
பாதுகாப்பு உற்பத்தியை விரிவுபடுத்துவதற்காக, உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு தொழில்துறை வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 91,450 கோடிக்கும் அதிக முதலீடுகளுடன் செயல்படும் இந்த திட்டங்கள், 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் மற்றும் உலகளாவிய போர் போக்குகள், எதிர்கால போர்களில் ட்ரோன்கள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை வெளிப்படுத்துகின்றன. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் தன்னாட்சி ஆயுத முறைகள் இந்தியாவின் முக்கிய கவனப்பகுதியாக மாறி வருகின்றன.
மேம்பட்ட போர்க் கப்பல்கள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் இந்திய கடற்படை, இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது ஆதிக்கத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதேபோல், விமானப்படைக்கும் நவீன போர் விமானங்கள் மற்றும் உயர்தர ஆயுத அமைப்புகள் அவசியமாகி வருகின்றன.
இந்த சூழலில், ரஷ்யாவின் 5-வது தலைமுறை போர் விமானமான SU-57 அல்லது அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கும் ஒப்பந்தங்கள் சாத்தியமாகும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக, பல நாடுகளை முந்தி உலகின் 3-வது பெரிய ராணுவ சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், 2029 ஆம் ஆண்டுக்குள் ஆயுத ஏற்றுமதியை 50 ஆயிரம் கோடியாக உயர்த்துவது இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 2026 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.