இந்துக்கள் மீது வன்முறை : மௌனம் காக்கும் திரையுலக ‘போராளிகள்’
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒன்றிணைந்து பேரணிகளில் பங்கேற்ற திரையுலகத்தைச் சேர்ந்த சிலர், வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களின் போது எங்கும் காணப்படாமல் இருப்பதாகக் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில், தொடர்ந்து இந்து விரோத நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது திட்டமிட்ட செயலா என்ற சந்தேகமும் பரவலாக பேசப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக நடைபெற்ற பெரும் மக்கள் போராட்டங்களின் விளைவாக அவரது அரசு வீழ்ந்தது. நாளுக்கு நாள் அதிகரித்த கலவர சூழ்நிலையால் அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதனைத் தொடர்ந்து முகமது யூனிஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
இந்தப் போராட்டங்களின் முக்கிய முகமாக இருந்த ‘இன்குலாப் மாஞ்சா’ அமைப்பைச் சேர்ந்த ஷெரிப் உஸ்மான் ஹாதி, வரவிருக்கும் பிப்ரவரி மாத தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், டாக்காவின் பிஜோய் நகர் பகுதியில் கடந்த 12ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களில், தீபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டதோடு, அவரது உடல் மரத்தில் கட்டப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் வங்கதேசத்தில் மட்டுமின்றி இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களை மனிதத்தன்மையற்ற செயல் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும், உணவு, தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை துண்டித்து மக்களை ஒட்டுமொத்தமாகத் தண்டிப்பது மனித உரிமை மீறல் என ராகுல் காந்தியும் கடுமையாக விமர்சித்தனர். அரசியல்வாதிகளைத் தாண்டி, திரையுலகப் பிரபலங்களும் பாலஸ்தீன விவகாரத்தில் தீவிரமாகக் குரல் கொடுத்தனர்.
தமிழகத்தில் குறிப்பாக, இயக்குனர்கள் வெற்றிமாறன், அமீர், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சத்தியராஜ் உள்ளிட்டோர் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினர். ஆனால், அதே நேரத்தில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களைப் பற்றி தெரிந்தும் தெரியாதது போல் மௌனம் காப்பது கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
வங்கதேசத்தில் உருவான கலவர சூழலை பயன்படுத்தி, இந்துக்கள் குறிவைத்து தாக்கப்படுவதாக ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இவ்வாறான தகவல்கள் வெளிப்படையாக வந்தபின்பும், எந்தவொரு கண்டனமும் அல்லது இரங்கலும் தெரிவிக்காதது, திரையுலகத்தைச் சேர்ந்த சிலர்மீது சந்தேகங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.
பாலஸ்தீன விவகாரத்தில் உற்சாகமாக குரல் கொடுத்தவர்கள், வங்கதேசத்தில் கொல்லப்பட்ட இந்து இளைஞருக்குக் கூட குறைந்தபட்ச இரங்கலைத் தெரிவிக்காதது ஏன் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் தீவிரமாக முன்வைக்கப்படுகிறது.
சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக செயல்படுகிறோம் எனச் சொல்லிக் கொண்டு, வெளிநாட்டு விவகாரங்களில் மட்டும் கருத்து தெரிவித்து, இந்துக்கள் மீது நடைபெறும் தாக்குதல்களிலிருந்து தங்களைத் தள்ளி வைத்துக் கொள்வது, திரையுலகப் போலிப் போராளிகளின் வழக்கமான நடைமுறையாக மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.