நெருங்கும் பொங்கல் பண்டிகை – வேகமெடுக்கும் மண் பானை தயாரிப்பு பணிகள்
தமிழர்களின் முக்கியமான அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை விரைவில் வரவுள்ள நிலையில், அதற்காக பயன்படும் மண் பானைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த ஒரு பார்வையே இந்தச் செய்தித் தொகுப்பு.
தமிழகத்தில் மண்பாண்டக் கலை என்றாலே சிவகங்கை மாவட்டத்தின் மானாமதுரை பகுதி தனித்துவமான அடையாளம் பெற்றுள்ளது. அங்குத் தயாரிக்கப்படும் மண்பாண்டப் பொருட்களுக்கு சமீப காலத்தில் புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றங்கரையில் கிடைக்கும் சிறப்பு களிமண்ணைப் பயன்படுத்தி, பாரம்பரிய முறைகளில் தயாரிக்கப்படுவதாலேயே மானாமதுரை மண்பாண்டங்கள் தனி மதிப்பைப் பெற்றுள்ளன.
தமிழகம் முழுவதும் புகழ்பெற்ற இந்த மண்பாண்டக் கலையின் மையமாக விளங்கும் மானாமதுரையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானைகள் தயாரிக்கும் பணிகளில் தொழிலாளர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனர். இங்கு பொங்கல் பானை மட்டுமல்லாமல், அகல்விளக்குகள், மண் அடுப்புகள், பூச்சாடிகள், மண் கலயங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
இவ்வகை மண்பாண்டத் தொழிலில் ஈடுபடும் குழுக்கள், ஒவ்வொரு வகை பொருளையும் தனித்தனியாக தயாரிக்கும் வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், தற்போது பொங்கல் பானை தயாரிப்பில் ஈடுபடும் குழுவினர் முழு கவனத்துடன் பணியாற்றி வருகின்றனர்.
அரசின் அனுமதியுடன் களிமண் எடுத்து வந்து, அதனுடன் தேவையான பிற மண் கலவைகளை சேர்த்து, பானை செய்ய ஏற்ற வகையில் பதப்படுத்தப்படுகிறது. பின்னர், சக்கரத்தில் வைத்து சுழற்றிப் பானை வடிவம் உருவாக்கப்படுகிறது. அதனை பெண்கள் மரப்பலகையின் உதவியுடன் தட்டி, தட்டி செம்மையான வடிவம் கொடுத்து, வெயிலில் நன்றாக உலர்த்துகின்றனர். அதன் பின் செம்மண் வண்ணம் பூசி, மீண்டும் உலர்த்தி, நெருப்பு சூளையில் வைத்து சுட்ட பிறகே விற்பனைக்கு தயாராக்கப்படுகிறது.
பொங்கல் காலத்தில் மட்டும் சுமார் 5,000 முதல் 7,000 வரை மண் பானைகள் தயாரிக்கப்படுகின்றன. இவை மண்பாண்ட தயாரிப்பாளர் கூட்டுறவு சங்கத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் வழங்கப்படுகின்றன. பின்னர் அந்த சங்கங்கள் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து, தமிழகம் முழுவதும் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் இப்பானைகள் அனுப்பப்படுகின்றன.
தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் பாரம்பரியம் மாறாமல் மண் பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் தொடர்வதால், இந்த பானைகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது. நீண்ட நேர உழைப்பால் உருவாகும் இந்த மண் பானைகளுக்கு மதிப்பளித்து, அவற்றை வாங்கி, கரும்புடன் இனிய பொங்கல் வைப்பதன் மூலம், நமது திருநாளை மட்டுமல்லாது, இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையையும் இனிமையாக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.