Epstein Files சர்ச்சை: மாயமான ட்ரம்ப் புகைப்படம் மீட்பு – அரச குடும்பத்துடன் எப்ஸ்டீனின் நெருங்கிய தொடர்புகள் அம்பலம்
பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனைச் சேர்ந்த ரகசிய ஆவணங்களில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் புகைப்படம் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை அறிவித்துள்ளது. இந்த சம்பவம், அமெரிக்க அரசியல் வட்டாரங்களிலும் சர்வதேச அளவிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாடாளுமன்றம் கொண்டு வந்த Epstein Files Transparency Act என்ற சட்டத்தின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் பல்லாயிரக்கணக்கான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டன. ஆனால், இந்த ஆவணங்கள் பதிவேற்றப்பட்ட மறுநாளே, 16-க்கும் மேற்பட்ட கோப்புகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி நீக்கப்பட்டதாக தெரியவந்தது.
நீக்கப்பட்ட கோப்புகளில் மிக முக்கியமானதாக கருதப்பட்டது ‘File 468’ என அடையாளப்படுத்தப்பட்ட ஒரு புகைப்படம். அதில், டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் கிஸ்லைன் மேக்ஸ்வெல் ஆகியோர் ஒன்றாக இடம்பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், ட்ரம்ப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் இளம்பெண்களுடன் இருப்பதைக் காட்டும் மற்றொரு புகைப்படமும் அந்த கோப்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் நீக்கப்பட்டதால், இது தொழில்நுட்பக் கோளாறா அல்லது திட்டமிட்ட மறைப்பு நடவடிக்கையா என்ற கேள்விகள் எழுந்தன. குறிப்பாக, 119 பக்கங்கள் கொண்ட ஒரு முழு ஆவணம் மறைக்கப்பட்டிருந்தது அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகப்பெரிய மறைப்பு முயற்சிகளில் ஒன்றாகும் என செனட் தலைவர் சக் ஷுமர் விமர்சித்தார். ஹவுஸ் ஓவர்சைட் கமிட்டியும் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்தது. ஜனநாயகக் கட்சியினரும் நீதித்துறையின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் மற்றும் பொது வாழ்க்கை பிரபலங்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்ட நிலையில், ட்ரம்ப் தொடர்புடைய புகைப்படங்கள் மட்டும் நீக்கப்பட்டதாக கூறப்பட்டதால், அரசியல் ரீதியான கடும் விவாதங்கள் எழுந்தன.
இந்த நிலையில், நீக்கப்பட்ட ட்ரம்ப் புகைப்படம் மீண்டும் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் பொதுவெளியில் வெளிப்படும் அபாயம் இல்லை என உறுதி செய்யப்பட்ட பிறகே அந்தப் புகைப்படம் மீண்டும் வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நீக்கத்திற்கு அதிபருக்கு எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்க துணை அட்டர்னி ஜெனரல் டாட் பிளான்ச் விளக்கம் அளித்துள்ளார். பாதிக்கப்பட்டோர் தரப்பின் கோரிக்கையின்பேரிலேயே சில புகைப்படங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையே, வெளியிடப்பட்ட புதிய ஆவணங்களில் முன்னாள் பிரிட்டிஷ் இளவரசர் ஆண்ட்ரூ தொடர்புடைய புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இங்கிலாந்தின் நோர்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் மாளிகையின் வரவேற்பறையில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படங்களில், ஆண்ட்ரூ ஐந்து பெண்களுடன் இருப்பதும், அருகில் கிஸ்லைன் மேக்ஸ்வெல் நிற்பதும் தெளிவாகக் காணப்படுகிறது. இந்த புகைப்படங்கள், ஜெப்ரி எப்ஸ்டீனுக்கும் பிரிட்டிஷ் அரச குடும்பத்துக்கும் இருந்த நெருக்கமான தொடர்புகளை வெளிக்கொணர்வதாக கூறப்படுகிறது.
மேலும், 2000 ஆம் ஆண்டு ஆஸ்காட்டில் நடைபெற்ற லேடீஸ் டே விழாவில் ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் மற்றும் மேக்ஸ்வெல் ஒன்றாக கலந்து கொண்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அந்த நிகழ்வில் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தும் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. பால்மோரலில் நடந்த வேட்டையாடல் நிகழ்வுகள், பக்கிங்ஹாம் அரண்மனையில் எடுக்கப்பட்ட படங்கள் உள்ளிட்ட பல புகைப்படங்கள், அரச குடும்பத்துடனான எப்ஸ்டீனின் தொடர்புகளை உறுதி செய்யும் வகையில் உள்ளன.
2010-ம் ஆண்டுக்குப் பிறகு எப்ஸ்டீனுடன் எந்த தொடர்பும் இல்லை என ஆண்ட்ரூ மறுத்து வந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் அந்தக் கூற்றுக்கு எதிராக சாட்சியமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் இருந்து இனி மேலும் என்னென்ன அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவரப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு, உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.