போளூர் பகுதியில் மணல் கடத்தல் – திமுக நிர்வாகி மீது மக்கள் குற்றச்சாட்டு
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, அதிகாரிகளின் ஆதரவுடன் திமுகவைச் சேர்ந்த ஒருவர் மணல் கடத்தலில் ஈடுபடுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் வாகனங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இரும்புலி கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகியான பெருமாள் என்பவர், அங்குள்ள பெரிய ஏரியில் இருந்து சட்டவிரோதமாக கனிம வளங்களை எடுத்து கடத்தி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கிராமத்தினர் குற்றம்சாட்டினர்.
இந்த நிலையில், பெரிய ஏரி அருகே ஒன்று கூடிய கிராம மக்கள், பெருமாளுக்குச் சொந்தமான ஹிட்டாச்சி மற்றும் ஜேசிபி இயந்திரங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த் துறை அதிகாரிகள், மணல் கடத்தல் குறித்து தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட திமுக நிர்வாகி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இயற்கை வளங்களை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தினர்.