புதுச்சேரியில் விடியவிடிய கனமழை: இந்திராகாந்தி சதுக்கம் வெள்ளத்தால் சூழ்ந்தது!
புதுச்சேரியில் நேற்று முழு இரவும் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் 11.84 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மழை நின்றபின்னரும், நகரின் இதயப்பகுதியான இந்திராகாந்தி சதுக்கத்தில் நீர் வடியாமல் தேங்கி, பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி முதல் புதுச்சேரியில் தொடங்கிய நிலையில், நேற்று அதிகாலை முதல் இடைவிடாமல் மழை பெய்தது. பகல் நேரத்தில் மட்டும் 2.86 செ.மீ. மழை பதிவானது. மதியத்துக்குப் பிறகு மழை தணிந்தாலும், இரவு 7 மணிக்குப் பின்னர் மீண்டும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து, புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மூன்று மணி நேரம் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் சாலைகள் முழுவதும் நீர் தேங்கியது. தாழ்வான பகுதிகள் சிறு குளங்களாக மாறின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். பொதுமக்கள் தாமே நீரை வெளியேற்ற முயற்சித்தனர். இரவு மட்டும் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மொத்தம் 24 மணி நேரத்தில் புதுச்சேரி 14.7 செ.மீ. மழை பெற்றது. இதனைத் தொடர்ந்து, முதல்வர் ந.ரங்கசாமி மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு, நீர் வடிகால் பணிகள் விரைவாக செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இன்று அதிகாலை முதல் மழை நின்றதால் சாலைகளில் தேங்கிய நீர் பெரும்பாலும் வடியிவிட்டது. வானம் தெளிவடைந்து வெயில் தெரிந்ததால் சாலைகள் உலரத் தொடங்கியுள்ளன.
ஆனால், இந்திராகாந்தி சதுக்கத்தில் மட்டும் வெள்ளநீர் வடியாமல் நீடித்து நிற்கிறது. மழைக்காலங்களில் இப்பகுதியில் எப்போதும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்குவது வழக்கம். இதைத் தடுக்க அண்ணாநகரில் வாய்க்கால்கள் அகலப்படுத்தப்பட்டு பெரிய வாய்க்காலுடன் இணைக்கப்பட்டிருந்தது. எனினும், சமீபத்திய கனமழை காரணமாக இங்கு மீண்டும் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது.
இதனால் அப்பகுதி வழியாக சென்ற வாகனங்கள் மெதுவாக நகர வேண்டிய நிலை ஏற்பட்டது. பஸ் நிறுத்தங்கள் மற்றும் கடைகள் முன்பாகவும் நீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வணிக நிறுவனங்களின் பார்க்கிங் பகுதிகளிலும் தண்ணீர் புகுந்ததால் பெரும் சிரமம் ஏற்பட்டது.