பாட்டில் குடிநீர் நிறுவனங்களுக்கு புதிய தர பரிசோதனை கட்டுப்பாடுகள்
ஜனவரி 1 முதல், பாட்டிலில் விற்கப்படும் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் புதிய தர பரிசோதனை விதிகளை கடைபிடிக்க கட்டாயமாகும் என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அறிவித்துள்ளது.
முன்னதாக, பாட்டிலில் குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு பி.ஐ.எஸ். சான்றிதழ் மற்றும் உணவு பாதுகாப்பு அங்கீகாரம் பெறுவது கட்டாயமாக இருந்தது. கடந்த ஆண்டில் பி.ஐ.எஸ். சான்றிதழ் கட்டாயம் நீக்கப்பட்ட நிலையில், மினரல் குடிநீர் மற்றும் குடிநீர் தயாரிப்புகள் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. பிரிவில் “அதிக ஆபத்துமிக்க தயாரிப்பு” என வகைப்படுத்தப்பட்டன.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சமீபத்திய உத்தரவு, பாட்டில் குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்கள் ஜனவரி 1 முதல் புதிய தர பரிசோதனை முறைகளை பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிடுகிறது.
இதன்படி, குடிநீரில் உள்ள நுண்கிருமிகள் மாதம் ஒருமுறை பரிசோதிக்கப்பட வேண்டும்; மற்ற தர அளவீடுகள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை பரிசோதனை செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.