2026 தேர்தலில் என்டிஏ – திமுக மோதலே பிரதானம்
திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தால், தனித்துப் போட்டியிடுவது சாத்தியமா என்பதை நடிகர் விஜய் தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் திமுகவுக்கும் இடையிலான போட்டியே முக்கியமாக இருக்கும் என அவர் கூறினார். திமுகவை தோற்கடிப்பதே விஜயின் அரசியல் இலக்கு என்றால், கூட்டணி இன்றி தனியாக நின்று அதை அடைய முடியுமா என்பதை அவர் பரிசீலிக்க வேண்டும் என்றும் தமிழிசை வலியுறுத்தினார்.
மேலும், திருமாவளவன் தொடர்ந்து எத்தனை ‘ஆர்எஸ்எஸ் பிள்ளைகள்’ என்கிற குற்றச்சாட்டுகளை முன்வைக்க உள்ளார் என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, அவர் இன்னும் பலரை அடையாளம் காட்டட்டும்; அதனால் அவருக்கே எரிச்சல் அதிகரிக்கும் என்றும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.