இளைய தலைமுறையிடம் பரத நாட்டியத்தை கொண்டு சேர்ப்பதே இலக்கு!
மார்கழி மாத கலைவிழாக்களின் ஒரு பகுதியாக, சென்னை மியூசிக் அகாடமியில் ஜனவரி 3ஆம் தேதி, நாட்டிய சங்கல்பா நடனப் பள்ளியின் சார்பில் “காருண்ய காவ்யா” எனும் நாட்டிய நாடகம் மேடையேறவுள்ளது. இந்தச் சூழலில், சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற பரத நாட்டியக் கலைஞர் ஊர்மிளா சத்ய நாராயணனின் கலைப் பயணத்தைப் பற்றி இங்கு பார்ப்போம்.
பரத நாட்டியம் என்பது வெறும் நடனக் கலை அல்ல; அது வாழ்க்கையின் ஓர் அங்கம் என்கிறார் ஊர்மிளா சத்ய நாராயணன். நடனம் இல்லாத வாழ்க்கையைத் தாம் சிந்தித்துக்கூட பார்க்க முடியாது என்று அமைதியான உறுதியுடன் கூறுகிறார். குடியரசுத் தலைவரால் சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற பெருமை, கலைமாமணி விருதின் மூலம் கிடைத்த அங்கீகாரம் எனப் பரத நாட்டியத்திற்கு அவர் செய்த சேவைகள் எண்ணற்றவை.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பரத நாட்டியக் கலையில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் ஊர்மிளா, இந்திய எல்லைகளைத் தாண்டி உலகின் பல நாடுகளிலும் பரதத்தின் பெருமையை எடுத்துச் சென்றுள்ளார். கலைக்கு முழுமையான அணுகுமுறை வேண்டும் என்ற நோக்கில், கடந்த 30 ஆண்டுகளாக “நாட்டிய சங்கல்பா” என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். தனது அரங்கேற்றம் நடைபெற்றுப் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நினைத்து பெருமிதம் கொள்கிறார்.
இந்தச் சிறப்பான தருணத்தில், அவரது நடனப் பள்ளியின் சார்பில், சென்னை மியூசிக் அகாடமியில் “காருண்ய காவ்யா” என்ற நாட்டிய நாடக நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த நாடகத்திற்கு இசையமைப்பாளர் எம்பார் கண்ணன் இசையமைக்க, சுமார் 60 பரத நாட்டியக் கலைஞர்கள் தீவிரமாகப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
பரத நாட்டியத்தை ஒரு ஆழமான பெருங்கடலாகக் கருதும் ஊர்மிளா, தாம் அதில் ஒரு சிறு துளி மட்டுமே எனத் தாழ்மையுடன் கூறுகிறார். நடனம் மட்டுமல்லாமல், நடனக் கோட்பாடு, கர்நாடக இசை, யோகா ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து மாணவர்களை உருவாக்குவதே தனது இலட்சியம் என்றும் விளக்குகிறார்.
ஆண்டாள் நாச்சியாரை நினைவுகூரும் மார்கழி மாதம், தமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய திருவிழாவாக இருப்பதாகக் கூறும் அவர், இந்த மாதம் கலைஞர்களுக்கு ஊக்கம் மற்றும் அங்கீகாரம் அளிக்கும் காலம் என்றும் மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார். பரத நாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய நடனக் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு சென்னை மியூசிக் அகாடமி வழங்கும் நிருத்ய கலாநிதி என்ற மதிப்புமிக்க விருது, இவ்வாண்டு ஊர்மிளா சத்ய நாராயணனுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த விருதை மிகுந்த பணிவுடனும் நன்றியுடனும் ஏற்றுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கும் அவர், இன்றைய இளைய தலைமுறை பரத நாட்டியத்தை கற்றுக் கொண்டு, அதன் அழகை ரசிக்க வேண்டும் என்பதே தனது கனவு என்கிறார். ஐம்பது ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டிருக்கும் ஊர்மிளா சத்ய நாராயணனின் நாட்டிய பாதச்சுவடுகள், பரத நாட்டியக் கலையின் உயிர்துடிப்பாகவே திகழ்கின்றன.