சாத்தனூர் அணை குடிநீர் குழாய் சேதம் – பள்ளத்தில் சிக்கிய கார்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில், சாத்தனூர் அணையிலிருந்து திருவண்ணாமலை மாநகருக்கு நீர் கொண்டு செல்லும் கூட்டு குடிநீர் திட்டக் குழாய் திடீரென உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சாத்தனூர் அணையின் கொளமஞ்சனூர் பிக்கப் அணையிலிருந்து திருவண்ணாமலை நகருக்கு, சுமார் 55 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட கூட்டு குடிநீர் திட்ட குழாய்களில் சமீபத்தில் தண்ணீர் வெளியேற்றம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் சேதமடைந்து, அதிக அளவில் நீர் வெளியேறியது.
குழாய் உடைப்பால் ஏற்பட்ட திடீர் மண் அரிப்பு காரணமாக, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று சுமார் 5 அடி ஆழமுள்ள பள்ளத்தில் உள்ளே சரிந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
உடனடியாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, பொதுமக்களின் உதவியுடன் கயிறுகள் கட்டி அந்த கார் மீட்கப்பட்டது. சம்பவ நேரத்தில் காரில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.