அகில இந்திய இந்து மகாசபை அறிவிப்பு
தைப்பூசம் திருநாளில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது உறுதியாக நடைபெறும் என அகில இந்திய இந்து மகாசபை அறிவித்துள்ளது.
ஈரோடு நகரில் அகில இந்திய இந்து மகாசபையின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலத் தலைவர் பெரி செந்தில் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற வலியுறுத்தி உயிர் தியாகம் செய்த பூரண சந்திரனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்குப் பின்னர் ஊடகங்களை சந்தித்த பெரி செந்தில், “இந்துமகாசபை” என்ற பெயரில் பல்வேறு அமைப்புகள் செயல்பட்டு வந்தாலும், தங்களது அமைப்பே உண்மையான அகில இந்திய இந்து மகாசபை எனக் கூறினார். போலி அமைப்புகள் தொடர்பாக அரசிடம் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், சாலைகளின் ஓரங்களில் இயங்கும் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களால் விபத்துகள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டிய அவர், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்தக் கடைகளை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.