தோட்டக்கலைத் துறை தனி அடையாளத்துடன் தனித்துறையாக நீடிக்க வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்
தோட்டக்கலைத் துறையின் தனித்தன்மை பாதிக்கப்படும் நிலையில், வேலைவாய்ப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டில் கடும் பின்னடைவு ஏற்படும் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
திமுக அரசு வெளியிட்டுள்ள உழவர் அலுவலர் தொடர்புத் திட்டம் 2.0 (UATT 2.0) தொடர்பான அரசாணைகள் எண் 252 மற்றும் 288, “கள அலுவலர் ஒருங்கிணைப்பு” என்ற பெயரில், தோட்டக்கலைத் துறையின் தனி அடையாளம், தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் செயல்திறனை பாதிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனை எதிர்த்து, மாநிலம் முழுவதும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் தோட்டக்கலை சாகுபடி பரப்பு வெறும் 13.5 சதவீதம் மட்டுமே என்றாலும், உற்பத்தி மதிப்பில் 30.5 சதவீதம் மற்றும் வேளாண் ஏற்றுமதியில் 58 முதல் 60 சதவீதம் வரை பங்களிப்பு வழங்கும் உயர்மதிப்புடைய துறையாக இது விளங்குகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த துறைக்கு தனித்துறை நிர்வாகமும், துறைசார் நிபுணத்துவமும் அவசியம் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், UATT 2.0 திட்டத்தின் கீழ் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் விற்பனை துறைகள் ஒன்றிணைக்கப்பட்டு, ஒரே அலுவலருக்கு பல துறை பொறுப்புகள் வழங்கப்படுவது நிர்வாக குழப்பத்தையும் செயல்திறன் குறைவையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையில் பணியாற்றும் பல தொழில்நுட்ப அலுவலர்களுக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி, தொலைதூர மாவட்டங்களுக்கு திடீர் இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் அவர்கள் கடுமையான பொருளாதார சுமை, மன அழுத்தம் ஆகியவற்றை சந்தித்து வருவதோடு, அவர்களது குழந்தைகளின் கல்வித் தொடர்ச்சியும் எதிர்காலமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆயிரம் தோட்டக்கலை பட்டதாரிகள் உருவாகி வரும் நிலையில், இந்தத் துறையின் தனித்துவம் அழிந்தால், வேலைவாய்ப்புகள், ஆராய்ச்சி நடவடிக்கைகள், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் திறன் முதலீடு ஆகியவை நீண்டகாலத்தில் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே, விவசாயிகளின் நலன், உணவு பாதுகாப்பு, ஏற்றுமதி திறன், தோட்டக்கலை அலுவலர்களின் குடும்ப நலன் மற்றும் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, UATT 2.0 தொடர்பான அரசாணைகள் எண் 252 மற்றும் 288-ஐ உடனடியாக முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும், அவசர இடமாற்ற உத்தரவுகளை நிறுத்த வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், தோட்டக்கலைத் துறை அதன் தனித்துவம் மற்றும் துறைசார் நிபுணத்துவத்துடன் தனித்துறையாக தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.