அலட்சியத்தால் செயலிழந்த தானியங்கி துணிப்பை வழங்கும் இயந்திரங்கள்
பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு அறிமுகம் செய்த “மீண்டும் மஞ்சப்பை” திட்டத்தின் ஒரு பகுதியாக நிறுவப்பட்ட தானியங்கி துணிப்பை வழங்கும் இயந்திரங்கள், தற்போது பராமரிப்பின்றி செயலற்ற நிலையில் இருப்பது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயந்திரங்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்களை இச்செய்தி தொகுப்பு எடுத்துரைக்கிறது.
இன்றைய காலகட்டத்தில், உணவகங்கள் முதல் சில்லறை கடைகள் வரை அன்றாட வாழ்க்கையின் பல துறைகளிலும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், 2022 ஆம் ஆண்டில் தமிழக அரசு “மீண்டும் மஞ்சப்பை” என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது.
மக்களிடம் துணிப்பை பயன்படுத்தும் பழக்கத்தை உருவாக்கும் நோக்கில், விழிப்புணர்வு விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 10 ரூபாய் செலுத்தினால் துணிப்பை பெறும் வகையில் தானியங்கி விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டன. ஆரம்ப கட்டத்தில் இத்திட்டத்திற்கு அரசின் கவனம் மற்றும் ஆதரவு இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால் காலப்போக்கில், இந்த இயந்திரங்களை பராமரிக்கும் பணியில் அதிகாரிகள் கவனம் செலுத்தாததால், பல இடங்களில் மின்சார வசதி இல்லாமல் அவை பயன்பாடின்றி கிடக்கின்றன. இதன் காரணமாக, பொதுமக்கள் அருகிலுள்ள கடைகளில் அதிக விலைக்கு துணிப்பைகளை வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த நிலைமைக்கு அதிகாரிகளின் அக்கறையின்மையே காரணம் என மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். முறையான பராமரிப்பும் கண்காணிப்பும் இருந்தால், இந்த தானியங்கி துணிப்பை இயந்திரங்கள் மீண்டும் மக்கள் ஆதரவைப் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.