தேர்தல் வாக்குறுதி நாடகக் குழு வீழ்ச்சியடையும் காலம் நெருங்கிவிட்டது
திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ள தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தேர்தல் அறிக்கை என்ற பெயரில் நாடகமாடும் கம்பெனி திவாலாகும் நாள் விரைவில் வந்து சேரும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், ஆசிரியர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி தெருக்களில் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஏசி அறைகளில் அமர்ந்து அடுத்த தேர்தலுக்கான அறிக்கையைத் தயாரிப்பது, ரோம் நகரம் தீக்கிரையாகிக் கொண்டிருந்தபோது நீரோ மன்னன் இசை வாசித்த கதையை நினைவூட்டுவதாக உள்ளது என்று சாடியுள்ளார்.
மேலும், 2021-ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகளில் 400-க்கும் அதிகமானவை இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், மீண்டும் புதிய அறிக்கையைத் தயாரிப்பதற்கான அவசியம் என்ன? இதற்கு முன் காற்றில் பறந்த வாக்குறுதிகளை மீண்டும் தேடி எடுத்து அதையே புதிதாக வழங்கும் குழுவா இது? அல்லது, மக்களை மீண்டும் ஏமாற்ற புதிய பொய்வாக்குறுதிகளை உருவாக்கும் திட்டக்குழுவா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.
எப்படியிருந்தாலும், புகைப்படங்களுக்காக மட்டுமே கூடும் அந்தக் கூட்டத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும், அவர்களுக்கான காலம் இன்னும் சில நாட்களே. “நாடு போற்றும் நல்லாட்சி” என்ற போர்வையில் வாக்குறுதிகளை வைத்து அரசியல் நாடகம் நடத்தும் இந்த திசைதிருப்புக் குழுவின் கூடாரத்தை, தமிழக மக்கள் விரைவில் கலைத்து விடும் நாள் தூரத்தில் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.