திருப்பரங்குன்றம் மலைக்கோயிலுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, பல்வேறு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவு இருந்தும் தீபம் ஏற்ற அனுமதி இதுவரை வழங்கப்படவில்லை.
இந்த விவகாரத்தைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக மலை உச்சிக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், சிக்கந்தர் பாதுஷா தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு விழாவையொட்டி, போலீஸ் பாதுகாப்புடன் ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமியர்கள் கொடியேற்ற நிகழ்ச்சியை நடத்தினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்துக்களுக்கும் தீபம் ஏற்ற அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி 15-க்கும் மேற்பட்ட இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சூழலில், தற்போது திருப்பரங்குன்றம் மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஆனால் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணை போலீசாரிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும், மலையில் வீடியோ அல்லது புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.