திருப்பரங்குன்றம்: சாலை மறியல் போராட்டம் – பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றத்தில் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படாத நிலையில், சிக்கந்தர் தர்காவில் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வலியுறுத்தியும் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்ததுடன், பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகளையும் பதிவு செய்துள்ளனர்.