ஒருமைப்பாட்டை அடைவதே உண்மையான சுதந்திரத்தின் அர்த்தம் – ஆளுநர் ஆர்.என். ரவி
பல்வேறு வேறுபாடுகளை தாண்டி ஒற்றுமையை நோக்கி பயணிப்பதே உண்மையான சுதந்திரத்தின் அடையாளம் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ள ஆரோவில்லில், கடந்த 15ஆம் தேதி தொடங்கிய இலக்கிய விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், தொழில் துறை பிரதிநிதிகள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, ஆரோவில் அறக்கட்டளை செயலாளரும், குஜராத் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலருமான ஜெயந்தி ரவி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர், இந்தியா என்பது ஒரு நிலப்பரப்பு மட்டுமே அல்ல; வேத மரபுகளில் ஆழமாக வேரூன்றிய “பாரத சக்தி” எனும் ஆன்மீக ஆற்றலின் வெளிப்பாடு எனக் குறிப்பிட்டார். வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நிலையிலிருந்து வளர்ச்சியும் மறுமலர்ச்சியும் கொண்ட நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சமூக, பண்பாட்டு வேறுபாடுகளைத் தாண்டி ஒருமைப்பாட்டை நோக்கிச் செல்வதே நாட்டின் உண்மையான விடுதலை என்பதை அவர் வலியுறுத்தினார்.