நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் முயற்சி நீதித்துறைக்கு அச்சுறுத்தல் – முன்னாள் நீதிபதிகள் கண்டனம்
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம், நீதித்துறையின் சுதந்திரத்தையே அச்சுறுத்தும் நடவடிக்கையாகும் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட 36 முன்னாள் நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் அந்த உத்தரவை நிறைவேற்றாத தமிழக அரசு, அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தொடர்பான அனைத்து தரப்பினரின் வாதங்களும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்தது.
இதற்கு எதிராக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல இந்து அமைப்புகள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளன. இதன் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் உட்பட 56 நீதிபதிகள் இணைந்து, அவருக்கு ஆதரவாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
அதேபோல், தற்போது உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருஷ்ணா முராரி, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் பி.என். பிரகாஷ், பார்த்திபன் உள்ளிட்ட மொத்தம் 36 முன்னாள் நீதிபதிகள் கையெழுத்திட்ட புதிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யும் முயற்சி என்பது நீதிபதிகளை அச்சுறுத்தும் வகையிலான ஆபத்தான நடைமுறையாகும் என்றும், இது நீதித்துறையின் சுதந்திரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.