அடிப்படை தேவைகளை புறக்கணிக்கும் திமுகவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள் – நயினார் நாகேந்திரன்
ஆத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தால் பல கிராமங்களில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று நடைபெற்ற “தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்” என்ற யாத்திரையில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், வரலாற்று சிறப்பும் பொருளாதார முக்கியத்துவமும் கொண்ட இந்தப் பகுதியில், விடியா திமுக அரசு பொதுமக்களின் அடிப்படை தேவைகளை கவனிக்காமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக விமர்சித்தார்.
குடிநீர் வழங்கும் திட்டங்கள் முழுமையாக செயல்படாததால் பல கிராம மக்கள் தண்ணீர் கிடைக்காமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஆத்தூர் நகரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், சரியான வடிகால் வசதிகள் இல்லாததால் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறினார். இந்த நிலை மக்கள் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், வேலைவாய்ப்புகள் இல்லாமை, இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்புகள் குறைவு, அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் இல்லாத நிலை ஆகியவை ஆத்தூர் மக்களின் நீண்டகால கோரிக்கைகளாக தொடர்ந்து இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த அனைத்துக்கும் உரிய பதிலை 2026 சட்டமன்றத் தேர்தலில் சேலம் – ஆத்தூர் மக்கள் வழங்குவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என நயினார் நாகேந்திரன் உறுதியாக தெரிவித்தார்.