விஜயகாந்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க விருப்பம் – சண்முக பாண்டியன்
தந்தை விஜயகாந்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகும் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆவல் தனக்கு இருப்பதாக நடிகர் சண்முக பாண்டியன் தெரிவித்துள்ளார்.
சண்முக பாண்டியன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள கொம்பு சீவி திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதன் விளம்பர நிகழ்ச்சியாக, கோவை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள சாந்தி திரையரங்கிற்கு சண்முக பாண்டியன் மற்றும் திரைப்படக் குழுவினர் நேரில் வந்தனர்.
அங்கு தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சண்முக பாண்டியன், தந்தை விஜயகாந்தின் வாழ்க்கை வரலாற்றை திரையில் கொண்டு வருவது எளிதான காரியம் அல்ல என்றும், அந்தப் படத்திற்கு சரியான பார்வையுடன் கூடிய திறமையான இயக்குநர் கிடைத்தால் கண்டிப்பாக நடிக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
மேலும், தற்போது அரசியல் களத்தில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்றும், முழுமையாக சினிமா பயணத்திலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.