திருப்பரங்குன்றம் : செய்தி திரட்ட சென்ற செய்தியாளர் மீது காவல் துறை அத்து மீறல் – பரபரப்பு
திருப்பரங்குன்றம் பகுதியில் செய்தி சேகரிக்க சென்ற ஒரு பத்திரிகையாளரிடம் காவல்துறை அத்துமீறியதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பகுதியில் செய்தி பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்களை காவல்துறையினர் தொடர்ந்து தடுத்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. நேற்று, மலைப்பகுதிக்கு இஸ்லாமியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து சில பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த நிகழ்வை பதிவு செய்ய முயன்ற செய்தியாளர்களிடம், “உங்களால்தான் பிரச்சனை ஏற்படுகிறது” என்று ஒரு தரப்புக்கு சாதகமாக திருப்பரங்குன்றம் கோயில் ஆய்வாளர் ராஜசேகர் பேசியதாகவும், அது சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் அருகே ஒரு பத்திரிகையாளர் வீடியோ பதிவு செய்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த காவலர்கள் அவரது செல்போனை பறித்து, அதிலிருந்த காட்சிகளை அழித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கும் அந்த செய்தியாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.