இந்துப் பண்டிகைகளுக்கு முதல்வரின் வாழ்த்து எங்கே? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி
பாஜகவை குறிவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஷமயமான விமர்சனங்களை முன்வைத்துள்ளதாக, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், முதல்வர் ஸ்டாலின் இதுவரை ஒருமுறையாவது இந்து சமயத்தைச் சேர்ந்த பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார்.
கிறிஸ்துமஸ் விழா மேடையில் மத வேறுபாடுகளை தூண்டும் வகையில் பேசிய பின்னர், பாஜகவை விமர்சிப்பதற்கு முதல்வருக்கு எந்த ஒழுக்க ரீதியான உரிமையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், உண்மையில் மதச்சார்பற்றவராக இருந்தால், பகவத் கீதையின் கருத்துகளை எப்போதாவது மேற்கோள் காட்டியுள்ளாரா என்றும் அவர் சாடியுள்ளார்.
இந்துக்கள் மீது முதல்வர் ஸ்டாலினுக்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ள தமிழிசை, மதச்சார்பின்மை குறித்து பேசுவதற்கான தகுதியே முதல்வருக்கு இல்லை என்பதை தாம் உறுதியாகப் பதிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.