ககன்யான் திட்டம் : விண்வெளி வீரர்களை பாதுகாப்பாகத் தரையிறக்க ‘ட்ரோக் பாராசூட்’ சோதனை வெற்றி
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முக்கியமான லட்சிய முயற்சியான ககன்யான் திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு மீட்டுக் கொண்டுவர உதவும் ‘ட்ரோக் பாராசூட்’ சோதனையை இஸ்ரோ வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.
இந்த சோதனைகள் சண்டிகரில் அமைந்துள்ள டிஆர்டிஓவின் ரயில் டிராக் ராக்கெட் ஸ்லெட் மையத்தில், டிசம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் மேற்கொள்ளப்பட்டன.
விண்வெளியில் இருந்து மிகுந்த வேகத்தில் பூமி நோக்கி வரும் ககன்யான் குழு தொகுதி (Crew Module) நிலைத்தன்மையை இழக்காமல் பாதுகாப்பாக நகர்வதற்காக, அதன் வேகத்தை கட்டுப்படுத்துவது ட்ரோக் பாராசூட்களின் முக்கிய பங்காகும். ககன்யான் விண்கலத்தில் நான்கு விதமான வகைகளில் மொத்தம் 10 பாராசூட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
முதற்கட்டமாக சிறிய அளவிலான பாராசூட்கள் செயல்பட்டு விண்கலத்தின் மேல்பகுதியை பிரிக்கின்றன. அதன் பின்னர் ட்ரோக் பாராசூட்கள் திறக்கப்பட்டு, விண்கலத்தின் அதிவேகத்தை படிப்படியாகக் குறைக்கின்றன.
இறுதிக்கட்டமாக மூன்று முக்கிய (Main) பாராசூட்கள் விரிந்து, விண்கலத்தை மென்மையாகவும் பாதுகாப்பாகவும் தரையிறக்குகின்றன. மிகக் கடுமையான வேக மற்றும் அழுத்த நிலைகளில் இந்த பாராசூட் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதைக் கண்டறிய இஸ்ரோ விரிவான சோதனைகளை நடத்தியது.
இந்தச் சோதனைகளில் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து தொழில்நுட்ப இலக்குகளும் வெற்றிகரமாக அடையப்பட்டுள்ளதுடன், பாராசூட் அமைப்பின் நம்பகத்தன்மையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.