மதுரை கிருஷ்ணாபுரம் : வீட்டில் இருந்த தொலைக்காட்சி வெடித்து தீப்பிடிப்பு – பரபரப்பு
மதுரை மாநகரின் கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், தொலைக்காட்சி திடீரென வெடித்து தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பகுதியில் வசித்து வரும் ராஜன் என்பவர், தனது மகள் அம்பிகாராஜனுடன் வீட்டில் இருந்த போது, தொலைக்காட்சியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மின்வயர்கள் வழியாக தீ வேகமாக பரவி, சில நொடிகளில் தொலைக்காட்சி வெடித்து சிதறியது.
கரும்புகை வீடு முழுவதும் பரவியதால் அச்சமடைந்த தந்தையும் மகளும் உடனடியாக வீட்டை விட்டு வெளியேறி உயிர் தப்பினர்.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், தீயை விரைவாகக் கட்டுப்படுத்தி அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்கள் தீக்கிரையாகி சேதமடைந்தன. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.