சீகன் பால்கு நினைவாக தரங்கம்பாடியில் மணிமண்டபம் கோரி 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் உண்ணாவிரதம்
தமிழறிஞர் சீகன் பால்குவிற்கு தரங்கம்பாடியில் நினைவுமணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, 500-க்கும் அதிகமான மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீகன் பால்குவின் பெருமையை போற்றும் வகையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பகுதியில் அந்த நினைவிடம் அமைப்பதற்காக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அந்த மணிமண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தரங்கம்பாடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மணிமண்டபம் தங்கள் பகுதியில் தான் அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.
தரங்கம்பாடியில் நினைவுமணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.