செவிலியர்களை குற்றவாளிகளைப் போல நடத்துவது தான் திராவிட மாடலா?
திமுக கட்சி மீண்டும் ஆட்சிப் பொறுப்பை அடைவது இனி கனவில்கூட சாத்தியமில்லை என்று தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தன்னலமற்ற சேவையால் சமூகத்திற்கு துணை நிற்கும் செவிலியர்களின் வேதனை மற்றும் கோபம், திமுக அரசை இனி அரியணை நோக்கி செல்ல விடாது என்று தெரிவித்துள்ளார். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளான சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அமைதியான முறையில் போராடி வரும் செவிலியர்களை காவல் துறையின் மூலம் வலுக்கட்டாயமாக அழைத்து சென்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதும், பின்னர் ஊரப்பாக்கத்தில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைப்பதும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சம் என அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பலர் முகம் சுளிக்கும் நோயாளிகளையும் தாய்மையுடன் பராமரித்து வரும் செவிலியப் பெண்களை, கொடூர குற்றவாளிகளைப் போல நடத்தி அடக்க முயற்சிப்பதே திராவிட மாடலின் அடையாளமா? நூற்றுக்கணக்கான பெண்களை உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளின்றி ஒரு மண்டபத்தில் அடைத்து வைப்பது தான் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற திமுக அரசின் விளக்கமா? என்று அவர் கடும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ஆட்சி முடிவடையும் தருவாயில் இருக்கும் நிலையில், திமுக அளித்த வாக்குறுதிகளை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என்று கேட்பவர்களையெல்லாம் மிரட்டி மவுனமாக்கும் செயல் எந்தவிதமான பாசிச சிந்தனையை காட்டுகிறது என்றும் அவர் சாடியுள்ளார். குறிப்பாக, பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செவிலியர் சங்க நிர்வாகிகளிடம் மிரட்டும் தொனியில் பேசியதாக அவர்கள் கூறுவது, திமுக தலைமையின் அகந்தை எல்லை மீறி விட்டதை வெளிப்படுத்துகிறது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐந்தறிவு கொண்ட உயிர்களுக்குக் கூட இரக்கம் காட்டுவதாக பேசும் சுகாதாரத்துறை அமைச்சர், உழைக்கும் வர்க்கத்தின் மீது எந்தவிதமான கருணையும் காட்டாதது வேதனையளிப்பதாக உள்ளது. தேர்தல் நேரத்தில் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை கொடுத்து மக்களின் ஆதரவைப் பெற்றுவிட்டு, ஆட்சியில் அமர்ந்தவுடன் அதே மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவும் திமுக என்ற ஏமாற்றுக் கட்சிக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் கிடைப்பது இனி கனவிலும் சாத்தியமில்லை என்று நயினார் நாகேந்திரன் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.