தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடக்கம் – தினசரி மின்தேவை 11 ஆயிரம் மெகாவாட்டாக குறைவு
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால், மாநிலத்தின் தினசரி மின்தேவை கணிசமாகக் குறைந்துள்ளது. வழக்கமாக 16 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த மின் தேவை, தற்போது 11 ஆயிரம் மெகாவாட்டாகப் பதிவாகியுள்ளது.
கோடைகாலங்களில் மின் தேவை 20 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் உயர்வது வழக்கம். கடந்த 2024 மே 2ஆம் தேதி அதிகபட்சமாக 20,830 மெகாவாட்டும், இவ்வாண்டு ஏப்ரல் 24ஆம் தேதி 20,148 மெகாவாட்டும் மின் தேவை பதிவானது.
மழை மற்றும் குளிர்காலங்களில் மின் பயன்பாடு குறைவதால், மின் தேவை இயல்பாகக் குறைகிறது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கியதையடுத்து, மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தாக்கமாக, அக்டோபர் 19ஆம் தேதி 12,557 மெகாவாட் மற்றும் தீபாவளியான 20ஆம் தேதி 10,923 மெகாவாட் மின்தேவை மட்டுமே பதிவானது.
மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாவது:
“மழை காரணமாக மின்சாரப் பயன்பாடு சுமார் 50% வரை குறைந்துள்ளது. மேலும், தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்கள் விடுமுறை இருப்பதால், பல அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதனால் மின்நுகர்வு குறைந்தது,” என்றனர்.
சென்னையில் வழக்கமாக அதிக மின்தேவை இருந்தாலும், தற்போது பலர் சொந்த ஊர்களுக்கு சென்றிருப்பதால் நகரின் மின்தேவை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரத்தில், அனல் மின் நிலையங்களின் 50% உற்பத்தி மட்டுமே மின்தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக உள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.