நமது பாரம்பரியத்தில் பல நன்மைகள் உள்ளன – பழமையை கைவிடக் கூடாது: டாக்டர் சுதா சேஷய்யன்
நமது பாரம்பரிய வாழ்வியலில் எண்ணற்ற நல்ல அம்சங்கள் அடங்கியுள்ளதால், அதனை அலட்சியப்படுத்தி அல்லது தூக்கி எறிந்து விடக் கூடாது என்று கல்வியாளரும், ஆன்மிக இலக்கிய சொற்பொழிவாளருமான டாக்டர் சுதா சேஷய்யன் வலியுறுத்தினார்.
சென்னை ஷெனாய் நகரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்ற நவரச பாரதி நிகழ்ச்சியில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பாரதியாரின் எள்ளுப் பேரன் நிரஞ்சன் பாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் சுதா சேஷய்யன், பாரதியார் படைத்த “புதுமைப் பெண்” என்ற கருத்து இன்றைய காலத்தில் முழுமையாக வெளிப்பட்டு வருவதாகவும், பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் தங்களை நிரூபித்து வருவதாகவும் கூறினார்.
பழையது என்பதற்காகவே அது தேவையற்றதாகிவிடாது என்றும், புதியது என்பதற்காக பழமையை மறந்து விடக் கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். நமது பாரம்பரிய மதிப்புகளில் சமூக முன்னேற்றத்திற்கான பல நன்மைகள் உள்ளதாகக் கூறிய அவர், அவற்றை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இளைஞர்கள் பாரதியாரின் சிந்தனைகளையும் அவரது தேசபற்று, சமத்துவக் கொள்கைகளையும் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.