செவிலியர் போராட்டம் : திமுக அரசுக்கு எதிராக அண்ணாமலை கடும் விமர்சனம்
தமிழகம் முழுவதும் ஒப்பந்த முறையில் பணியாற்றி வரும் செவிலியர்களை நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டும் என்ற அவர்களது கோரிக்கைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் என்று முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சமூக வலைதளமான எக்ஸில் வெளியிட்ட பதிவில், பணி நிரந்தரம் கோரி சென்னை சிவானந்தம் சாலையில் அமைதியாக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500-க்கும் அதிகமான செவிலியர்களை மாலை நேரத்தில் காவல்துறையினர் கைது செய்து, நள்ளிரவில் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இறக்கி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதன் காரணமாக, அதிகாலை 4 மணி வரை அந்த இடத்திலேயே செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திமுக அரசின் இந்த அடக்குமுறை நடவடிக்கையை கடுமையாக கண்டிப்பதாக தெரிவித்த அண்ணாமலை, திமுக தேர்தல் அறிக்கையின் வாக்குறுதி எண் 356-ல், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தது நினைவூட்டினார். ஆனால், ஆட்சி பொறுப்பேற்று ஐந்தாவது ஆண்டை நெருங்கியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முன்னேற்றமும் இல்லை என அவர் விமர்சித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல் மக்கள் நலனுக்காக பணியாற்றியவர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என்றும், கடந்த நான்கரை ஆண்டுகளாக அவர்கள் பல்வேறு வழிகளில் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தும் அரசு தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
செவிலியர்கள் கோருவது புதிதல்ல, தேர்தல் நேரத்தில் திமுக தந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு தான் என்றும், அவர்களை நேரில் சந்தித்து பேச வேண்டிய அடிப்படை மரியாதையைக் கூட சுகாதாரத்துறை அமைச்சர் வழங்க மறுப்பது, பொதுமக்கள் மீது திமுக அரசின் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், 2023-ஆம் ஆண்டு ஒப்பந்த முறையில் பணியாற்றிய 2,472 செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டபோதும், பாஜக அதனை எதிர்த்து குரல் கொடுத்ததாக நினைவூட்டிய அண்ணாமலை, தமிழகமெங்கும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்களை நிரந்தர பணியில் அமர்த்த வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கைக்கு எப்போதும் ஆதரவாக நிற்போம் என்றும், செவிலியர்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.