ஆடு திருட்டில் ஈடுபட்ட இருவரை மரத்தில் கட்டி பொதுமக்கள் தாக்குதல்
கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியில், காரில் வந்து ஆடுகளை திருட முயன்ற இருவரை கிராம மக்கள் பிடித்து மரத்தில் கட்டிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு, அய்யம்பாளையம் கிராமத்தில் கார் ஒன்றில் வந்த நால்வர், ஆட்டுப்பட்டியில் இருந்த ஆடுகளையும் அருகிலுள்ள பிள்ளையார் கோயில் உண்டியலையும் திருட முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், அந்த காரில் வந்தவர்களில் விக்னேஷ் மற்றும் பெரியமருது என்ற இருவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, இருவரையும் மீட்டு கைது செய்ததுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், காரில் இருந்து தப்பியோடிய மற்ற இரண்டு நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதேவேளை, ஆடு திருடும் போது பிடிபட்ட இளைஞர்கள் மரத்தில் கட்டப்பட்டிருந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.