பூர்ண சந்திரன் மரணத்திற்கு தமிழக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்
பூர்ண சந்திரன் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழக அரசே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
மதுரையில் பூர்ண சந்திரனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த இழப்பு அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் ஏற்பட்டது என குற்றம்சாட்டினார்.
மேலும், பூர்ண சந்திரனின் மனைவிக்கு ரூ.1 கோடி நிதி இழப்பீடு வழங்குவதோடு, அரசு பணியும் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். அவரது மறைவைக் குறிக்கும் வகையில் அனைத்து வீடுகளிலும் மோட்ச தீபம் ஏற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இனிமேல் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் அரசின் சார்பில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என வலியுறுத்திய நயினார் நாகேந்திரன், இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவுகளை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
பூர்ண சந்திரன் குடும்பத்திற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் இணைந்து ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.