டெல்டா மாவட்டங்களில் மழை பெருக்கு: 1.30 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் அவதி
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சுமார் 1.30 லட்சம் ஏக்கர் இளம் சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கி பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. இதனுடன், அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்கதிர்களும் மழைநீரால் சூழப்பட்டதால், விவசாயிகள் கடும் கவலையில் உள்ளனர்.
மொத்தம் 6 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், அதில் 70 சதவீதம் அறுவடை முடிந்தது; மீதமுள்ள 30 சதவீதம் வயல்களில் தயாராக உள்ளது. அறுவடை செய்த விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் தேங்கியுள்ளதால், நெல் கொள்முதல் பணிகள் மந்தமாகி விட்டன. இதனால், பலர் தங்களது நெல்லை விற்பனை செய்ய முடியாமல் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை தொடர்வதால், அறுவடை செய்ய வேண்டிய குறுவை நெற்கதிர்களும், புதிதாக நடவு செய்யப்பட்ட சம்பா நெற்பயிர்களும் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தின் சாலியமங்கலம், பூண்டி, நல்லவன்னியன் குடிகாடு, ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5,000 ஏக்கர் நெற்கதிர்கள் மழையால் சாய்ந்து சேதமடைந்துள்ளன.
திருவாரூர் மாவட்டத்தில் 10,000 ஏக்கர் குறுவை நெல் மற்றும் 20,000 ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்தில் 10,500 ஏக்கர், நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் சுற்றுவட்டாரங்களில் 1 லட்சம் ஏக்கர் இளம் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
தொடர்ச்சியான மழையால், வயல்களில் தேங்கிய தண்ணீரை வடிகால்கள் வழியாக வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால், நெல் மணிகள் முளைக்கும் அபாயம் மற்றும் இளம் சம்பா நெற்பயிர்கள் அழுகும் நிலை உருவாகியுள்ளது.
விவசாயிகள் வேதனை
இந்த நிலை குறித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி. ஜெகதீசன் கூறியதாவது:
“டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட 6 லட்சம் ஏக்கர் குறுவை பயிர்களில், சுமார் 4.20 லட்சம் ஏக்கரில் அறுவடை முடிந்துள்ளது. ஆனால், மழையால் ஈரப்பதம் அதிகரித்து நெல் விற்பனை தடைபட்டுள்ளது. இன்னும் 20 சதவீத நெல் களஞ்சியங்களில் தேங்கி உள்ளது. அதோடு, மழைநீரால் சம்பா நெற்பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கடும் நஷ்டம் எதிர்நோக்குகிறார்கள்,” என அவர் தெரிவித்தார்.