தேர்தல் பலனுக்காக டிஜிபி நியமனத்தை தாமதப்படுத்துகிறாரா முதல்வர்? – பழனிசாமி குற்றச்சாட்டு
முழுநேர டிஜிபி நியமனத்தை தேர்தல் ஆதாயத்துக்காக தாமதப்படுத்தி, மக்களின் பாதுகாப்போடு முதல்வர் ஸ்டாலின் விளையாடி வருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
“தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு துறை டிஜிபியின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே முடிவடைந்தது. இந்நிலையில், தேர்தல் காலத்தில் தமக்கு சாதகமான அதிகாரியை தேர்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், மாநில மக்களின் பாதுகாப்பை புறக்கணித்து, முழுநேர டிஜிபி நியமனத்தை முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இழுத்தடிக்கிறார்.
புதிய டிஜிபிக்கான மூன்று பெயர்களை உள்ளடக்கிய இறுதி உத்தேசப் பட்டியலை யூபிஎஸ்சி ஏற்கனவே அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படியிருக்க, அந்த மூவரில் ஒருவரை நியமிக்க முதல்வருக்கும் திமுக அரசுக்கும் என்ன சிக்கல்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “இந்நிலையில் காவல்துறையினர் வீரவணக்க நாளில் மட்டும் புகைப்படம் எடுக்க ஆர்வமாக கலந்துகொள்வது வேடிக்கையாக உள்ளது. அவர்கள் அணியும் கருப்பு பட்டைக்கு ரத்தக் கொதிப்புதானா காரணம் என்று சட்டப்பேரவைத் தலைவர் கேட்பாரா? அல்லது அதைக் ‘சிறைக்கைதி சீருடை’ என்று அமைச்சர் ரகுபதி கூறுவாரா?” என பழனிசாமி விமர்சித்துள்ளார்.