செயலிழந்த ஸ்மார்ட் பைக் திட்டம் : சென்னை மாநகராட்சி நிர்வாகக் குறைபாடே காரணமா?
சென்னைவாசிகளிடையே ஆரம்பத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஸ்மார்ட் பைக்” திட்டம், திமுக அரசின் நிர்வாக அலட்சியத்தால் இன்று பெயருக்கே மட்டுமே செயல்பட்டு வருகிறது. இந்த திட்டம் எவ்வாறு செயலிழந்தது என்பதை இந்தச் சிறப்பு செய்தித் தொகுப்பில் காணலாம்.
சென்னை என்றாலே எப்போதும் சுறுசுறுப்பான நகர வாழ்க்கையும், சாலைகளில் முடிவில்லாத போக்குவரத்து நெரிசலும் நினைவுக்கு வரும். இந்த நெரிசலைக் குறைக்கவும், குறுகிய தூரப் பயணங்களை எளிதாக்கவும், பாதசாரிகளுக்கு உதவவும் 2019ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்திய திட்டம்தான் “ஸ்மார்ட் பைக்” திட்டம்.
சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, ஹைதராபாத் தலைமையகமாகக் கொண்ட ஸ்மார்ட் பைக் மொபிலிட்டி நிறுவனம், முதல் கட்டமாக மெரினா கடற்கரை, அண்ணா நகர், பூங்கா உள்ளிட்ட 76 பகுதிகளில் 500 ஸ்மார்ட் பைக்குகளை பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், உண்மையில் சுமார் 30 கோடி ரூபாயே செலவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு மணி நேரத்திற்கு வெறும் 5 ரூபாய் கட்டணத்தில் பயணிக்கக் கூடிய இந்த ஸ்மார்ட் பைக்குகள், தொடக்க காலத்தில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து நடந்து செல்ல வேண்டிய பயணிகளுக்கு இது பெரிய உதவியாக இருந்தது. ஆனால், காலப்போக்கில் பராமரிப்பு இல்லாமையால், இந்த “ஸ்மார்ட் பைக்குகள்” இன்று மோசமான நிலையில் மாறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்களின் உடல்நலனை மேம்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்ட திட்டம், தற்போது பயன்பாடற்ற நிலையில் கிடப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. மழையும் வெயிலும் தாக்கி சேதமடைந்த பைக்குகள், இயக்க முடியாத நிலையில் குப்பைகளுக்கிடையே காட்சியளிக்கின்றன.
சென்னையில் 500க்கும் மேற்பட்ட இடங்களில், 5,000-க்கும் அதிகமான ஸ்மார்ட் பைக்குகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற இலக்கு இருந்த நிலையில், மோசமான நிர்வாகம் மற்றும் அலட்சியத்தால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டுவிட்டதாக பலர் தெரிவிக்கின்றனர்.
எனவே, ஸ்மார்ட் பைக்குகளை முறையாகப் பராமரிக்கவும், இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தி மீண்டும் மக்களுக்குப் பயனுள்ள வகையில் செயல்படுத்தவும் வேண்டும் என்பதே சென்னைவாசிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.