தீபாவளி விடுமுறை முடிந்தது – சென்னைக்குத் திரண்ட மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முடங்கியது
தீபாவளி விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்குத் திரும்பிய மக்களின் பெரும் திரளால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
தொடர்ச்சியான விடுமுறை காரணமாக, கடந்த 17 முதல் 19ஆம் தேதி நள்ளிரவு வரை லட்சக்கணக்கானோர் பேருந்து, ரயில், கார், வேன் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திருந்தனர்.
இந்த காலத்தில் மட்டும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வழியாக சுமார் 1.6 லட்சம் வாகனங்கள் கடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விடுமுறை முடிந்ததால் தென்மாவட்டங்களில் இருந்த மக்கள் நேற்று முன்தினம் முதல் சென்னைக்கு திரும்பத் தொடங்கினர். அதன்படி, விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை முன்தினம் சுமார் 17 ஆயிரம் வாகனங்கள் கடந்திருந்த நிலையில், நேற்று மதியம் 12 மணிக்குப் பிறகு வாகன எண்ணிக்கை திடீரென அதிகரித்தது.
மொத்தம் 8 பாதைகள் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டும், இரவு 9 மணி வரையிலும் சுமார் 40 ஆயிரம் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்து சென்றன என கூறப்படுகிறது.
தொடர்ச்சியான மழையால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. இதன் காரணமாக சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் நெரிசல் ஏற்பட்டது. விழுப்புரம் மேல் வீதி பகுதியில் வாகன நெரிசலை குறைக்க புறவழிச்சாலைகள் வழியாக போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.
மேலும், மாவட்டத்தின் 6 இடங்களில் நடைபெற்று வரும் மேம்பாலம் கட்டுமானப் பணிகள் காரணமாக வாகனங்கள் சர்வீஸ் சாலைகள் வழியாக இயக்கப்பட்டதால் போக்குவரத்து சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டது.