நாகையில் கனமழை தொடர்ச்சி – கரைக்கு திரும்பிய மீனவர்கள்
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததையடுத்து, மீன்வளத் துறை தற்காலிகமாக மீன்பிடிக்கத் தடை விதித்துள்ளது. இதனால், நாகை மாவட்ட மீனவர்கள் மூன்றாவது நாளாக இன்று கடலுக்குச் செல்லவில்லை.
நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திருப்பூண்டி, வேதாரண்யம், கோடியக்கரை உள்ளிட்ட பல கடற்கரை பகுதிகளில் இன்று முழுவதும் மழை கொட்டித் தீர்த்தது. கடலுக்குச் சென்றிருந்த பெரும்பாலான விசைப்படகு மீனவர்கள் அதிகாரிகள் உத்தரவின்படி கரைக்கு திரும்பியுள்ளனர். கரையில் உள்ள மற்ற மீனவர்கள், தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு மீன்பிடி பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
இதனால், மீன் வரத்து குறைந்து, நாகை மீன் சந்தையில் விலை உயர்ந்துள்ளது. அதே சமயம், மழையால் நாகை நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் சிரமம் அனுபவித்து வருகின்றனர். நாகூர் வள்ளியம்மை நகர், அம்பேத்கர் நகர், நாகை பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் சாலைகள் குளம்போல் மாறியுள்ளன.
மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாததால் சில இடங்களில் கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கி நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாகை மாவட்டத்தில் திருப்பூண்டியில் 84 மி.மீ., நாகையில் 82 மி.மீ., திருக்குவளையில் 63 மி.மீ., வேளாங்கண்ணியில் 47 மி.மீ., வேதாரண்யத்தில் 42 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
இதேநேரத்தில், காரைக்கால் மாவட்டத்திலும் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும் புதுச்சேரி மீன்வளத்துறை அறிவித்துள்ளது.