தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்க முயற்சி : திமுக நிர்வாகி உள்ளிட்ட இருவர் மீது வழக்கு
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்க முயன்றதாக திமுக நிர்வாகி உட்பட இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குப்தா என்பவர் முந்திரி தொழில் செய்து வரும் தொழிலதிபர் ஆவார். அவர், தனக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்வதற்காக ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தை அணுகியுள்ளார். ஆனால், அதில் ஏற்பட்ட சில சிக்கல்களால் நில விற்பனை நடைபெறாமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், திமுக பேரூராட்சி செயலாளர் சுந்தர வடிவேல் மற்றும் அவரது கூட்டாளிகள், அந்த நிலத்தை விற்றுத் தருவதாக கூறி, 20 லட்சம் ரூபாய் கமிஷன் வழங்க வேண்டும் என கார்த்திக் குப்தாவிடம் வற்புறுத்தியதாக தெரிகிறது.
இதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததையடுத்து, திமுக நிர்வாகிகள் கார்த்திக் குப்தாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படும் நிலையில், கார்த்திக் குப்தா பண்ருட்டி நீதிமன்றத்தை நாடினார்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், திமுக பேரூராட்சி செயலாளர் சுந்தர வடிவேல் மற்றும் ராஜாராம் ஆகிய இருவர் மீது புதுப்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.